30.6.14

என்னாமா ஏமாத்துறாய்ங்க!

         அடடே "ஜன்னலோர சீட்டு!" என்று எண்ணியவாறு பேருந்தின் கடைசி இருக்கையில் ஓரமாக சென்று அமர்ந்தேன். தேநீர் அருந்தியவாறு வெளியே உலாவிய நடத்துநரிடம் மெதுவாகக் கேட்டேன்: "வண்டி எப்போ எடுப்பீங்க?" என்று. எதோ அவரது இரண்டு வாசல் மாடிவீட்டை இலவசமாக எழுதிக்கேட்டது போல கோபத்தோடு, "எடுப்போம்யா.. சீக்கிரம் எடுப்போம்" என்றார். திட்டு வாங்கியதை யாராவது பார்த்தார்களா என்று சுற்றிமுற்றி பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.
        பேருந்து கிளம்ப இன்னும் 10 நிமிடம் ஆகும் போல என்று மனதில் எண்ணியவாறு பேருந்தில் எழுதியிருந்த திருக்குறளைப் படித்துக் கொண்டிருந்தேன்: 
          "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
            கள்ளத்தால் கள்வேம் எனல்."
              நேரம் போகாமல் திருக்குறளை மனப்பாடம் செய்துகொண்டே அமர்ந்திருந்தேன். திடீரென பேருந்தின் முன்வாசல் வழியாக சடசடவென பேருந்திற்குள் இருவர் ஏறினர். பின்வாசல் வழியே ஒருவர் ஏறி, மெதுவாக எனக்கு முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்தார். முன்னால் நின்றுகொண்டிருந்த இருவரும் தனது பையில் வைத்திருந்த ஒரு துணியை வெளியே எடுத்து நீட்டி ஏதோ பேச ஆரம்பித்தனர். வெட்டியாகத் தானே இருக்கிறோம் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம் என நானும் என்போல பேருந்தில் வெட்டியாக இருந்தோரும் வேடிக்கை பார்த்தோம்.
                "இதோ பாருங்கள் மக்களே.. பாம்பே  சஃபாரி துணி! 1000 ரூபாய்க்கு பெறும் இந்த துணியை உங்களுக்காக ஏலம் விடப்போறேன். ஆரம்ப மதிப்பு 100 ரூபாய் தான்!" என்கிறான். சட்டென எனக்கு முன்சீட்டில் மெதுவாக அமர்ந்த நபர்: "300 ரூபாய்" என்கிறான். "நல்லா கூட்டிக் கேளுங்க ஐயா, மதிப்பு 1000 ரூபா" என்றபடி வேற ஏலம் கேளுங்க என்றான். வேறு குரலே கேட்கவில்லை அவனே "ஆம் 500 ரூபாய் கேட்டு விட்டார்!"  என்கிறான். பின் எனக்கு முந்தைய சீட்டில் இருக்கும் நபர் ஒரு கணிசமான தொகையைக் கூறி ஏலத்தை முடிக்கிறார். இவர் ஏலத்தை முடித்ததும் இவருக்கு பேனா சீப்பு போன்ற பல பரிசுப்பொருட்களையும் அவர் கொண்டு வந்து கொடுக்கிறார். பேருந்தில் இருந்த அனைவரும் பின்னால் திரும்பி அந்த அதிர்ஷ்டசாலியை பார்க்கின்றனர். இந்த காட்சிகள் பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா மக்களிடம் ஏமாற்றுவது போலவே இருந்தது! இதை யாரடா நம்பப்போகிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது!
                     மறுபடியும் இன்னொரு துணியை விரித்தபடி, "பெங்களுரு சாஃப்ட் காட்டன் சட்டைத்துணி! மதிப்பு - 2000 ரூபாய்" என்றான். படித்து முடித்து வேலைக்கு செல்லும் வயதில் ஒரு இளைஞன்! தனது தந்தையுடன் ஊருக்கு சென்றுகொண்டிருக்கிறான். சட்டென எழும்பி "1000" என்றான்! நான் அதிர்ந்து போனேன். அடேய் ஆயிரம் திரைப்படத்தில் காண்பித்தாயிற்று! இன்னுமா நீங்கள் திருந்தவில்லை என்று எண்ணிக்கொண்டேன்! பின்னால் இருக்கும் பாம்பே சஃபாரி வெற்றியாளர் வேகமாக "2000" என்றான்! படித்த இளைஞன் சளைத்தவனா? விடவில்லையே! "2500-ஆம்!" பின்னிருக்கை "3000" என ஏற்றிவிட நம்மாள், "3250"-க்கு முடிக்கிறான் ஏலத்தை! ஏதோ சாதித்தது போல ஒரு வெற்றிக்களிப்பு இளைஞனின் முகத்தில்! ப்ளாஸ்டிக் சீப்பு, பேனா முதலிய பரிசுகளைப் பெற்றுக்கொண்டு துணியைக் கேட்கிறான். பேருந்து புறப்படும் வரை, "கொஞ்சம் பொறுங்கள் விற்பனை முடிந்ததும் தருகிறேன்" என்றான்.
                       பேருந்து புறப்படும் நேரமும் வந்தது. என்னைப் பார்த்து "உர்ர்ர்ர்"-என உறுமிய நடத்துநரும், பேருந்தின் ஓட்டுநரும் பேருந்திற்குள் நடந்துகொண்டிருக்கும் எதையுமே கண்டுக்கொள்ளாதது போல மிகவும் சாந்தமாக ஏறினர். பேருந்து கிளம்பவும், தனது பையில் இருந்த துணியை
இளைஞனிடம் நீட்டி, "இந்தா! காச எடு!" என்றான். துணியைத் தொட்டுப் பார்த்த வாலிபன், "என்ன இது சட்டைத்துணி இப்படி இருக்கு? இது 200 ரூபாய் கூடப் பெறாதே" என்றான்! ஏலக்காரன், - இப்போது மிகவும் கடுமையாக!- "இந்தா நா போட்ருக்க சட்டைய வேணா கழற்றித் தாரேன்! போட்டுக்கிறியா? பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க இப்டி பிச்சக்காரன் மாதிரி பேசுற? ஏலம் கேட்டில்ல? காச எடு!" என்றான்! படித்த இளைஞன்! இதற்கு மேல் பேசினால் எங்கு தான் இன்னும் அவமானப் பட்டுவிடுவோமோ என்று பயந்து காசை நீட்டி அந்த துணியை பெற்றுக்கொண்டான்!
              ஏலக்காரன் இறங்கி அடுத்த பேருந்தில் ஏறினான்! கடைசி இருக்கையை கவனித்தேன் - அதே பாம்பே சஃபாரி துணி வெற்றியாளர்! பேருந்து கிளம்பியது! அருகில் இருந்த பெரியவர் தன் கைப்பேசியை தட்டி கண்ணதாசனை எழுப்பினார் :
 "வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்....!"

வலைப்பூக்களின் தந்திரம்

       தங்களது வலைப்பூக்களுக்கும் வலைத்தளங்களுக்கும் வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக சில எழுத்தாளர்கள் சில விஷம தகவல்களையும் இல்லாத வதந்திகளையும் பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறாக இணையதளங்களில் பரப்பப்படும் சில விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நம் கொஞ்சுதமிழ் வலைப்பூ சிறிது கவனம் செலுத்துகிறது. அவற்றில் முதன்மையாக இன்று தானியங்கி வங்கி இயந்திரம் பற்றிய ஒரு வதந்தியை விவரிக்கிறோம்.


      ATM என்றழைக்கப்படும் தானியங்கி வங்கி இயந்திரங்களில் பணம் எடுக்கசெல்லும்போது கொள்ளையர்கள் பணம் எடுப்பவரை மிரட்டி எல்லா பணத்தையும் எடுக்க செய்து கொள்ளை அடிப்பது இன்றுவரை இயல்பாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க ஒரு வழி இருப்பதாக சில வருடங்களுக்கு முன்னர் ஒரு வதந்தி ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரவியது. அதன்படி கொள்ளையர்கள் யாராவது உங்களை மிரட்டினால் தங்களது 4 இலக்க கடவுச்சொல்லை பின்னிருந்து முன்னாக மாற்றி பதிவு செய்தால் இயந்திரம் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுப்பதாகவும்,இதனால் கொள்ளையரை மிக எளிதாக பிடித்துவிடலாம் என்றும் அந்த வதந்தி தெரிவித்தது.

            சற்றே எண்ணிப் பார்த்தேன். எனது கனரா வங்கியின் கடவுச்சொல் 7447 என்பதாகும். இதனை தலைகீழாக எழுதினாலும் அதே 7447 தானே. இந்த வதந்தி கூறுவது உண்மையெனின் ஒவ்வொரு நேரமும் நான் பணம் எடுக்கும்போது என்னைச் சுற்றி பாதுகாப்பிற்கு காவல்துறையும் வந்திருக்கும்.

      இது என்ன என்று விசாரிப்பதற்காக வங்கி சார்ந்த ஒரு அதிகாரியிடம் கேட்டேன். அவர் கூறியதாவது : அந்த வதந்தி கூறுவது போன்ற ஒரு வசதி இந்தியாவில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவ்வாறு அமல்படுத்தப்பட்டால் மாலைமாற்று எண்களை (Palindrome Numbers இலக்கங்களை திருப்பி எழுதினாலும் அதே எண் தான் வரும்) வங்கிகள் கடவுச்சொற்களாகத் தராது என்றும் கூறினார்.

      வலைத்தளங்களுக்கு ஓர் வேண்டுகோள்: மக்கள் மத்தியில் புரளிகளை கிளப்பி பக்கத்திற்கு வாசகர்களை சேர்ப்பது அறிவீனம் இல்லையா? புரிந்து செயல்படுங்கள். 

23.6.14

மோடி அரசின் முதல் பட்ஜெட் - மக்களின் எதிர்பார்ப்புகள்

       பிரதமராக பதவியேற்றப் பிறகு நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடக்கும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
   
        மக்களின் ஏகோபத்திய ஆதரவுடன், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொறுப்பேற்றிருக்கும் மோடி அரசிடம் பொதுமக்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள்? ஒரு சிறிய அலசல்.
     பதவியேற்ற சில தினங்களிலேயே முந்தைய அரசால் காலியாக்கப்பட்ட அரசு கஜானாவை நிரப்புவதற்காக சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாக வழக்கம்போல புதிய பிரதமரும் சொன்னது யாருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது. சொன்னது போல ரயில் கட்டண உயர்வு! மக்களிடையே சிறிது சலனத்தை அது ஏற்படுத்தினாலும், இவர் ஏதோ மாற்றம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது என்பதே உண்மை. 
       குறைந்தபட்ச வருமான வரி விலக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுவே சம்பாதிக்கும் இடைநிலை பொதுமக்களின் பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. அரசிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்ற போதும் இது மக்களிடையே மறைமுகமாக மோடி அரசின் செல்வாக்கை அதிகப்படுத்தும் என்பது அவர்களும் அறிந்த ஒரு உண்மை.
    மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பது, அவற்றுடனான நல்லுறவை மேம்படுத்துவது ஆகியவற்றை தனது 3 முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக வைத்துள்ள பிரதமர் கண்டிப்பாக அது தொடர்பான சில திட்டங்களை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு மட்டுமின்றி அரசியல் தலைவர்களிடையிலும் நிலவுகிறது.
      இணையதளங்கள் தான் இக்காலத்தில் விரைவில் சேவைகள் கிடைக்க வழி செய்யும் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்த தலைவர் மோடி. அவர் பிரதமராவதற்கு மிகப் பெரிய அளவில் உதவியது இந்த இணையம் தானே. இணையதளங்கள் மூலம் அனைத்து சேவைகளும் உடனடியாக கிடைக்க வழி செய்யப் போவதாக பிரதமர் கூறியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
         மறைமுக வரிகளில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அது எந்த அளவில் இருக்கும் என்பதை அறியவும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இது எல்லாம் போக மோடி அவர்களின் கனவு திட்டங்களான கல்வி, சுகாதாரம் மற்றும் சுத்தமான பொதுக்கழிவறை திட்டங்களும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. 
    மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நமக்கு 10ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் பதிலளிக்கும் என்று நம்புவோம்!

மக்கள் நிர்வாகம்

     கல்லூரி விடுமுறை நாட்கள் தான். விடுமுறையிலும் ஏதாவது செய்தால் தானே ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் கூறுவது போல பின்னாளில் ஊரைத் தாண்டி ஊரப்பாக்கம் அருகே 3BHK வீடு வாங்கமுடியும்? அதனால் நானும் சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள ஒரு கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்வதற்கு சென்றேன். வழக்கம்போல பம்பரம் போல வேலை செய்யும் பொறியாளர்களும், மற்ற தொழிலாளர்களும் கம்பெனியை சுறுசுறுவென சுற்றி வந்துகொண்டிருந்தனர். நான் வழக்கம்போல எனது ப்ராஜெக்ட் வேலைகளை செய்யத் தொடங்கினேன். வேலை செய்பவர்களை வேலை செய்கிறார்களா, எவ்வளவு நேரம் செய்கிறார்கள், எவ்வளவு நேரம் ஓய்வெடுக்கிறார்கள், எப்படி வேலை செய்கிறார்கள் என்று நோட்டமிட்டு அதனை எப்படி இன்னும் சிறப்பாக செய்யலாம் என்று அறிவுறுத்துவது தான் எனது ப்ராஜெக்ட். பணிகள் மதியம் வரை வழக்கம்போல தொடர்ந்தன.  

காலையில் வேலை ஆரம்பத்தில், தொழிளாலர்களிடம் இருக்கும் அந்த சுறுசுறுப்பு கடைசி வரை நீடிப்பதே இல்லை. இவ்வளவுக்கும் அந்த வேலை ஒன்றும் கடினமான வேலையும் கிடையாது. என்ன காரணம் என்று எண்ணிக்கொண்டே எனது கைக்கடிகாரத்தில் நேரத்தை நோட்டமிட்டபடி நடந்தேன். சிறிது தொலைவில் ஒரு ஐம்பது வயது பெரியவர் ஒருவர் அங்கே இருந்த குப்பைகளை அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டபடி நடந்து கொண்டிருந்தார். இவர் காலையில் வந்தது முதல் இதே வேகத்துடன் வேலை செய்துகொண்டிருக்கிறாரே என்று வியந்தபடி அவர் அருகே சென்றேன். “ஐயா, நீங்க காலைல இருந்து ஓய்வே இல்லாம நடந்துகிட்டே இன்னும் சுறுசுறுப்பா வேல செய்யுறீங்க… ஆனா இங்க உள்ளவங்க எல்லாம் நின்னுக்கிட்டே செய்யுற வேலைக்குக் கூட சோர்வாகிட்டாங்களே?” என்று கேட்டேன். பெரியவர் தான் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டே கூறினார்: “தம்பி... வேலை செய்யுறவங்கள இப்புடி ஒன்னு சேர்த்து போடக்கூடாது பா… அதுல ஒருத்தருக்கு கொஞ்சம் களைப்பாகுற மாதிரி தோணுனாக்கூட பக்கத்துல இருக்குறவங்க கிட்ட பேச ஆரம்பிச்சுருவான்! பக்கத்துல இருக்கவனுக்கு உண்மையாவே களைப்பா இல்லைனாலும் அவன் சொன்னது களைப்பாக்கி விட்டுரும். தனியா இருந்தா அதெல்லாம் தோணுனாலும் செய்யுற வேலையில மறந்துரும்… இது தெரியாம ஒரே இடத்துல கும்பலா போட்ருக்கானுங்க!” என்றபடி தனது குப்பைக்கூடையை இழுத்துக்கொண்டே சென்றார். சற்று திரும்பிப் பார்த்தேன் மேலாளர் அறையில் அவரது தலைக்குப் பின்னால் அலமாரியில் Strategic People Management” புத்தகம்!

21.6.14

சில்லறை - தர்மமும் தன்மானமும்!

       உலகில் ஒவ்வொரு மனிதனும் விட்டுக்கொடுக்க துணியாத ஒரே விஷயம் தன்மானம். தன் உயிரை உடலை விட்டு நீங்க விடாமல் தடுக்க வேறு வழியே இல்லை - யாசிப்பதை விட்டால் - என்ற கொடுநிலை ஏற்படும்போது தான் அவன் அதுவரை தன் வாழ்நாளில் காப்பாற்றி வந்த அவனது அடையாளத்தையும் தன்மானத்தையும் இழக்கத் துணிகிறான். தான் பிச்சை எடுப்பது தன் குழந்தைகளை எப்படி பாதிக்கும், தன் மனைவி மற்றும் குடும்பத்தினரை எப்படி அவமானப்படுத்தும் என்பதெல்லாம் தெரிந்தும்கூட அவன் யாசிக்கிறான் என்றால் அவனது உண்மையான நிலை என்னவாக இருக்கும்? வயதான காலத்தில் பிச்சை எடுத்தால் தான் அந்த இருகரங்களுக்குள் அடங்கும் வயிற்றுக்கு சோறு போட முடியும் என்ற கடைசி கட்ட நம்பிக்கைக்கு வந்த பெரியவர்களின் சோகம் எவ்வளவு மோசமாக இருக்கும்? - என்றல்லாம் பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தவாறு எண்ணிக் கொண்டிருந்தேன். வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் ஓடும் மத்தியரேகை தான் இந்த "யாசிப்புநிலை" என எனது ஆராய்ச்சி நிலைக்கு முடிவுரை செய்தேன்.


          பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. கண்கள் பிதுங்கிட, நெஞ்சிலும்பு தோலுக்கு வெளியே புடைத்திட, பலநாள் பட்டினி கிடந்த தோற்றத்தில் இருந்த ஊமைப் பெரியவர் அருகே வந்து தன் வயிற்றைத் தட்டி தர்மம் கேட்டார். எனது ஆழ்ந்த ஆராய்ச்சி முடிவுகள் பெரியவருக்கு சாதகமாக இருந்ததால், எனது வலதுகை எனை ஏதும் கேளாமலே சட்டைப் பாக்கெட்டில் இருந்த 20 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டியது.

          பெரியவர் கண்களில் ஆனந்த நீர்பெருக்கு!  கண்டதும் என் மனதுக்குள் பெருமை கலந்த மகிழ்ச்சி! 

              பேருந்து கிளம்பிடவே, கரம்கூப்பி கும்பிட்டவரை கண்கள் தொடர்ந்தன. வயிற்றில் கட்டி வைத்திருந்த சில்லறைகளை பொறுக்கியவாறு பசியில் ஓடினார்... உணவகத்தையும் தாண்டி... அடடா ஊமை என்று நினைத்தால் கண்பார்வையும் குறைவு தான் போல என்று நினைத்தபடி திரும்பினேன். திரும்பிய திசையிலிருந்து கணீர் குரல் - "தம்பி. இந்தா 60... ஒரு குவாட்டர் குடு!"

1.6.14

என்ன வளம் இல்லை?


தமிழ் மண்ணிலே பிறந்து, தமிழ்மொழியிலே வளர்ந்து, தமிழையே தினம் தொட்டு, தொடங்கி, தொழுது, தமிழனென கம்பீரமாக நடைபோட்ட காலமும், இனிவரும் நாளிலே மறைந்து ஓடிடும் போலும். தமிழிலே படித்தால் ஏளனம், தமிழிலே பேசினால் வெட்கம், தன்னைத் தமிழனெனக் காட்டிக்கொண்டால் அவமானம்! இது போதாதென தமிழினத்திற்க்கே சொந்தமில்லாத பொறாமை, துரோகம், சுயநலம்! தன்னை மட்டுமே எண்ணி தனக்காகவே வாழும் கூட்டம்! தாய்த்திருநாட்டில் காணாததை வேற்றுநாட்டில் கண்டுவிட்டார் போலும்.      “நாட்டுக்கு நீ என்ன செய்தாய்” என்ற கேள்வியை அன்று ஜப்பானியரும், சீனர்களும் தன்னைத்தானேக் கேட்டுக் கொண்டதனால் தான் இன்று அவர்கள் இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு முன்னேறிவிட்டனர். “நல்ல சம்பளத்துடன் வேலை இந்தியாவில் இல்லையாம்” – காரணமெனச் சொல்கிறார்கள் ஒருசில படித்த சாமானியர்கள்! அவ்வளவு பேசுபவர்கள் அந்த வேலைகள் இந்தியாவில் ஏன் இல்லை என்று ஒருகணமாவது எண்ணிப் பார்த்ததுண்டா? ஒன்றிரண்டு காரணமல்ல, ஓராயிரம் உண்டு. 


“தன் வேலை – தன் வாழ்க்கை – தன் குடும்பம்” என்ற தனிதத்துவம்!

“எவனாவது ஒருவன் முன்னே செல்லட்டும் – பின்னால் தொடர்ந்து கொள்ளலாம்” என்ற பெருந்தன்மை!

“எப்படியோ இன்று ஒருநாள் கழிந்தது” என்ற உயரிய கொள்கை!
இவை அனைத்தும் மேலே வாதாடும் அதே சாமானியரின் கொள்கைகள் தான்!

    இங்கிலாந்தின் 30 சதவிகித மருத்துவர்கள் இந்தியர்கள் தானாம். போதாதென அமெரிக்காவின் நாசாவில் 35 சதவிகிதம் இந்திய பூர்வீகவாதிகளாம். இப்படி இந்தியாவை அனாதையாக்கிவிட்டு, வேற்றுநாடுகளைப் பூத்துக் குலுங்கச் செய்யச் செல்லும் மேல்மட்ட அன்பர்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் அதைவிட மோசம்!

   ஆறு பேர் கொண்ட ஏழ்மையான குடும்பம்! தாய், தந்தை, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி – இவர்களின் வாழ்க்கைச்சுமையை தனிமனிதனாகத் தன் தோளில் சுமக்கின்ற இந்தியாவின் ஒரு சராசரி குடிமகன்! இந்தியாவில் வேலை பார்த்தால் சரிவர சம்பாதிக்க முடியவில்லை என்று வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் ஒரு கீழ்மட்டமான கம்பெனியில் தன் பெயரைப் பதிவு செய்கிறான். மகன் வெளிநாடு செல்கிறான் என்ற சந்தோஷம், அண்ணன் சம்பாதித்து பணம் அனுப்புவான் என்ற நம்பிக்கை, என் குடும்பத்தின் தரம் உயர்ந்து விடும் என்ற கனவு…. இவை அனைத்தையும் தன்னோடு விமானத்தில் ஏற்றிக் கொண்டு சென்று, வெளிநாட்டுக் கல்லறைகளில் கொண்டு போய் அடைக்கிற அவலமும் நடக்கத்தான் செய்கிறது. நாம் எல்லோரும் நினைப்பது போல் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் அங்கே வசதி பெற வாழ்வதில்லை.


    அரபு நாடு ஒன்றில் வேலை பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் அங்குள்ள கொத்தடிமைகள் பற்றிச் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் என் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. வேலை விஷயமாக இவர் நாட்டின் ஒரு பகுதிக்கு சென்றபோது அங்கு இவரைத் தமிழனென அடையாளம் கண்டு கொண்ட ஒரு நபர் ஓடி வந்து தன்னை ஊருக்கு கூட்டிச் செல்லுமாறு இவரது கால்களை பிடித்துக் கொண்டு கதறி இருக்கிறார். விசாரித்தபோது, அவர் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, ஏதோ ஒரு பெயர் தெரியாத வேலைவாய்ப்பு ஏஜென்சி மூலமாக வெளிநாடு வந்ததாகவும், அவர்கள் இங்கே கொத்தடிமையாக சேர்த்துவிட்டதையும் கூறியிருக்கிறார். முதலாளியை எதிர்த்துக் கேள்வி கேட்டதால் பாஸ்போர்ட்டையும் பறித்து ஒட்டகங்களை மேய்க்க சொல்லி பெயர் தெரியாத ஊரிலே விட்டு சென்று விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    இது ஒருவரின் கதையல்ல. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு லட்சகணக்கில் ஏற்றுமதி செய்யப்படும் பல மக்கள் இப்படித்தான் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பலர் இரகசியமான முறையில் எந்த பதிவிலும் இல்லாமல் இறந்து போவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஏழைகள் என்ன கேட்கவா போகிறார்கள்?
    இதற்கெல்லாம் தீர்வு? தீர்க்கமான சட்ட திட்டங்கள் இல்லை, அரசியல் முறை இல்லை என்று மற்றோரை சொல்வதைவிட்டு விட்டு, தூங்கிக் கொண்டிருக்கும் நம் சுயபுத்தியைக் கொஞ்சம் தட்டி எழுப்பித்தான் பாருங்களேன்!
    வெறும் எண்ணெய் வளமும், பணபலமும் கொண்ட நாடுகள் எல்லாம், தெளிவான மனித வளமும், தூய்மையான அறிவுபலமும் கொண்ட ஆற்றல்மிகுந்த இந்தியாவைக் கண்டு, பின்னங்கால் பிடரியிலடிக்க தலைதெறித்து ஓடுவதை, இந்த தலைமுறையே நிமிர்ந்து நின்று, “தமிழனென்ற” கர்வத்துடன் காணலாம்.


             வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!