25.12.14

நம்மக்கள் நம்மக்களே!

      தமிழகத்தின் தென்மாவட்டங்களிலே சற்று வேகமாகவே பரவிவரும் இறை நம்பிக்கை தான் அய்யா வழி நம்பிக்கை! இந்த வழிபாடானது, சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அய்யா வைகுண்டர் என்பவரை பின்தொடர்வதாகும். சற்று விசித்திரமான வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய இந்த நம்பிக்கையை சற்று மேலோட்டமாக ஆராய்ந்து தான் பார்ப்போமே என்று எண்ணினேன்.

    அவ்வாறு ஆராய்கையில்  இந்த  வழிபாட்டு முறையில் பல ஆச்சரியமூட்டும் விசித்திர பழக்க வழக்கங்கள் இருப்பதை அறிந்தேன். அவற்றுள் ஓரிரு விஷயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

      தருமம் என்பதே இந்த வழிபாட்டுமுறையின் முக்கிய கொள்கையாக காணப்படுகிறது. ஊருக்கு ஒரு பதி இருக்க வேண்டும் என்ற கொள்கை முன்னிறுத்தப்படுகிறது. பதி என்றால் 'கோவில்' போல பார்ப்போருக்கு தெரிகின்றபோதும், இத்தகைய பதிகளின் முக்கிய நோக்கம் தாழக்கிடப்போரைக் காப்பதும், பசியில் இருப்போருக்கு தருமம் அளிப்பதுமே ஆகும். இன்றும் ஒவ்வொரு தமிழ்த்திங்களின் முதல் ஞாயிறு அன்று இந்த தர்மப்பதிகளில் அன்னதானம் அளிக்கப்படுகிறது. 

       இறைவனின் அவதாரம் என்று போற்றப்படும் அய்யா வைகுண்டர் அவர்கள் ஒரு பகுத்தறிவு சிந்தனையாளர். தான் வாழ்ந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினரைக் காப்பாற்றும் பொருட்டு பல இன்னல்களை அனுபவித்தவர். அவர் தன் மக்களை சாதி மதம் பாராமல் ஒருமைப்படுத்த போராடியவர். அவரைப் போற்றி அவரது சிந்தனைகளை மிகச் சிறப்பாக இக்கால மக்கள் தொடர்வது பாராட்டத்தக்க விஷயமாகவே இருந்தாலும், சில செயல்களில் மக்கள் பின்தங்குகிறார்கள். 

    தலைமைப்பதியாம் சுவாமித்தோப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. மாப்புக்கேட்டல் என்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன்படி இறைவனிடம் அனைவரும் சேர்ந்து அய்யாவிடம் செய்த தவறுகளுக்காக மாப்பு கேட்பதும், நல்ல குணங்களை தருமாறு இறைவனிடம் கேட்பதுமாக இருக்கும். ஒருவர் சொல்ல மற்றவர் அதை ஐந்து முறை பின்தொடர்வதுமாக இருக்கும். அன்று முதல் ஞாயிறு ஆனதால் கூட்டம் அலைமோதியது. ஒருவர் கூற மற்றோர் அதை பின்தொடர்வதாக இருந்தது. என்ன தான் சொல்கிறார்கள் என்று கவனிக்கலாம் என்று கூர்மையாக காதுகொடுத்தேன். மதியம் 12 மணி ஆனதால் பசி மயக்கத்தில் ஏதோ கடமைக்கு அதனை சொல்லிவிட்டால் இறைவன் நமக்கு அனைத்தையும் நமக்கு தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் சொல்லுவதை உணர்ந்தேன். "அய்யா பொறுமை தரனும்" என்ற வாக்கியத்தை முன்னால் வாசிப்பவர் சொல்லி முடிக்கக்கூட இல்லை. அதற்குமுன் நம்மக்கள் பின்தொடர ஆரம்பிக்கிறார்கள். "அய்யா பொறுமை" இவ்வளவு தான் கேட்கிறது. அதற்கு மேல் நம்மக்களுக்கு பொறுமை இல்லை. இவர்களுக்கு அய்யா வழிபாட்டின் நோக்கத்தையும் அதன் தத்துவத்தையும் எடுத்துக்கூறியே ஆகவேண்டும்.

              உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, மாப்புகேட்டல், என அனைத்தையும் சத்தமாக உச்சரிக்க காரணம் என்ன தெரியுமா? அவ்வாறு உச்சரித்தால் தான் இறைவன் நமக்கு அருள்தருவார் என்றா? இல்லை. அவ்வாறு நாம் கருத்தை நடுநெற்றியில் வைத்து சத்தமாக உச்சரிக்கையில், நம் மனம் முழுவதும் அக்கருத்து நிரம்பியிருக்கும். உதாரணமாக, “அய்யா பொறுமை தரணும்” என்று உச்சரிக்கும்பொழுது, மனம் முழுவதும் அக்கருத்து நிரம்பியிருந்தால், நம் சிந்தனையும் செயலும் அதே கருத்தை நோக்கியே இருக்கும். இதையே அய்யா வழி முன்னிறுத்துகிறது. இதை சற்றும் அறியாமல் கடமைக்கு கத்துவதால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை நம்மக்கள் அறிய வேண்டும்.

    அய்யா வழியில் சிலை வழிபாடு இல்லை! அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? சிந்தித்தது உண்டா? அய்யா வைகுண்டர் மிகச் சிறந்த பகுத்தறிவுக்காரர். மக்களை சிந்திக்க வைக்க முயன்றவர். வாழ்க்கையின் அர்த்தத்தை மக்களுக்கு புரிய வைத்தவர். "கடவுளை வெளியே தேடி அலையாதே. அவன் உன்னுள் தான் இருக்கிறான். நீ செய்யும் செயலில் தான் கடவுளைக் காணமுடியும்" என்ற அற்புதமான கருத்தை முன்னிறுத்தவே ஒரு வித்தியாசமான முறையை கையாண்டார். “சிலையை வணங்காதே! கண்ணாடியை வணங்கு! அதற்குள் இருக்கும் உன்னை வணங்கு. அவ்வாறு வணங்கும்போது, உன்னுள் இருக்கும் நல்ல குணங்கள் வெளிவரும் தீய குணங்கள் தானாகவே அடங்கும்” என்ற பகுத்தறிவுமிக்க கொள்கையை மக்களிடத்தே வலியுறுத்தினார். ஆனால், நம்மக்கள் சும்மா விடுவார்களா? ஒரு விஷயம் கிடைத்தால் அதை நான்காய் பிரித்து ஏழாய் மடித்து அதை பத்தாய் சொல்வதில் கெட்டிக்காரர்களாயிற்றே! ஆம் அவரது கருத்துப்படி கண்ணாடியைத் தான் வணங்குகிறார்கள்! ஆனால் எப்படி தெரியுமா? கண்ணாடிக்கு மாலையிட்டு பொட்டு வைத்து! இப்படி செய்வதற்கு சிலை வழிபாடே செய்துவிடலாமே! ஒன்று மட்டும் உணருங்கள்!

     நீங்கள் அவரது கருத்தைக் கொன்று அதன் சாம்பலைத் திரித்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள்! என் கருத்து மக்கள் மனதைப் புண்படுத்தினால் மன்னிக்கவும். ஆனால் என் கருத்து யாரேனும் ஒருத்தருக்காவது மாற்றத்தை ஏற்படுத்த வழிசெய்யுமானால், அதன் பெருமையும் புகழும் அய்யா வைகுண்டருக்கே போய் சேரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!