25.4.14

தமிழனின் கோபுர பெருமை

       பி.ஆர்க்., பி.இ., படித்தும் தன் சொந்த வீட்டு   திட்டப்படத்தைக் கூட சரிபார்க்கத் தெரியாமல் இருக்கும் என் போன்ற இளைஞர்களே...! பல்லவர் காலத்தில் பனையுயர ஆஞ்சநேயர் சிலைகளும் வானுயர இராஜ கோபுரங்களும் கடகடவென கட்டி முடிக்கப்பட்ட வரலாறுகள் இக்கால இன்ஜினியர்களையும் ஆர்க்கிட்டெக்டுகளையும் சற்றே அண்ணார்ந்து பார்க்கத்தான் செய்கின்றன. கோடி கோடியாக செலவு செய்து உருவாக்கியும்கூட இவ்வளவு துல்லியமாக நுட்பமான சிற்பங்களையும் கோபுரங்களையும் செதுக்கமுடியவில்லை என்பதுவே நிதர்சன உண்மை. இவ்வாறு இருக்கையில் அக்கால தமிழர் மட்டும் எப்படி கட்டினார்கள்? அவர்கள் கையாண்ட கட்டுமான முறைகள்தாம் யாவை? தொடருங்கள்...

எந்த உயரத்தில் கோபுரம் இருக்கவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டபின், அந்த உயரத்துக்கு சுமார் அரை மைல் தூரத்தில் இருந்து இருபுறமும் மண்ணைச் சரித்து, மேடு போல அமைத்து, அதனை மண் சாலையாக மட்டப்படுத்தி, அதன்வழியே கோபுரம் க்ட்ட தேவையானவற்றை கொண்டு செல்வார்களாம்.

குதிரை சக்தியும் யானை சக்தியும் இக்கால வாகனங்களின் உந்துசக்தியைவிட உபரியாகவும் மலிவாகவும் இருந்தது திண்ணம். அக்கால மன்னர்கள் அவற்றை முறையே கையாண்டுள்ளனர். ஒரே கல்லில் செய்யப்பட்ட பல டன் எடை கொண்ட பெரிய பெரிய சிலைகளையும் தூண்களையும் அவ்வளவு உயரத்துக்கு எளிதாக உயர்த்துவது இவ்விருசக்தியினால் மட்டுமே சாத்தியமாயிற்று.

எந்த கோணத்தில் மண்சரிவை ஏற்படுத்தினால் யானையின் சக்திக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட எடையுள்ள கல்லை சிரமமின்றி மேலே கொண்டு செல்ல இயலும் என்பதை என்ஜினியரிங் மெக்கானிக்ஸ் படிக்காமலேயே, சூத்திரங்கள் ஏதும் இல்லாமலேயே அன்றைய தமிழர்கள் மிகத் துல்லியமாக கணித்து அதை செயல்படுத்தி இருக்கிறார்கள்.ஆனால் இன்றைய இன்ஜினியர்களோ ஒரு கல்லை மேலே ஏற்றுவதற்க்குக் கூட பக்கம் பக்கமாக படம் வரைந்து கணக்கு போடுகிறார்கள்.

 பெஞ்சமின் ஃப்ரான்க்ளின் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் இடிதாங்கியின் செயல்பாட்டைக் கூட நம் முன்னோர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோவில் கோபுரங்களில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! உண்மைதான்! வானுயர்ந்த கட்டிடங்களில் இடிதாங்கிகளை நிறுவி அவற்றை சுற்றி இருக்கும் மனைகளை இடி தாக்குதலில் இருந்து காப்பாற்றும் விந்தை, அக்கால கோவில் கோபுரங்களில் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது.

ஃப்ரான்க்ளினின் இடிதாங்கியானது, பல கூர்மையான ஊசிகளைக் கொண்ட ஒரு நீளமான இரும்பு அல்லது தாமிரக் கம்பியினால் செய்யப்பட்டது. அதனை உயரமான கட்டிடங்களில் மேல்பகுதியில் வைத்து, அதன் அடியை நீளமான ஒரு தாமிர ஒயரில் இணைத்து அந்த ஒயரை கட்டிடத்தின் உள்வழியாகவோ வெளிவழியாகவோ நேரடியாக தரைக்கு கொண்டு சென்று அதனை எர்த் செய்து விடுவார்கள். இதையே தான் அக்கால தமிழர்கள் கோபுரத்தின் மேல் தாமிர கலசங்கள் அமைத்து செய்தனர். கோபுர கலசங்கள், அதன் கூர்மையான பகுதியின் வாயிலாக மின்னலினால் ஏற்படும் மின்னூட்டத்தை மிக எளிதாகக் கடத்தி, அதனை கோபுரத்தின் உள்வழியாக தரைக்கு கொண்டு சென்று, அங்கே புதைக்கப்பட்டிருக்கும் கோபுர யந்திரத் தகடு வழியாக எர்த் செய்கிறது. உலோகங்களிலேயே அதிக மின்கடத்தல் திறன் கொண்ட உலோகமாதலின், தாமிரத்தினாலேயே பெரும்பாலும் கோபுர கலசங்கள் செய்யப்பட்டுள்ளன. கூர்மையான பகுதிகள் பொதுவாகவே மின்னூட்டத்தை மிக எளிதாக கடத்துமாம். கோபுரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரக்க பொம்மைகளும், காவல் தெய்வங்களும், கூர்மையான ஆயுதங்களுடன் அமைக்கப்பட்டிருப்பதற்கும் இதுவே காரணம்.
இது போலவே, கோபுர கலசத்தின் உள்ளே நவதானியங்களை வைத்திருப்பது தமிழர் வழக்கம். இவை குறைகடத்திகளாதலின் மின்னல் ஏற்படும் சமயத்தில், மின்னூட்டத்தினால் கலசங்கள் பாதிக்காமல் இருக்க உதவுகின்றன. அதே சமயம், இயற்கை பேரழிவுகளால் பயிர்கள் யாவும் அழியும் தறுவாயில், இங்கே கோபுர உச்சியில் சேமித்து வைக்கப் பெற்றுள்ள தானியங்களை விதைத்து விவசாயம் செய்ய உதவும் வகையிலும் அமைத்துள்ளனர். என்னே தமிழனின் சிந்தை!

130 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து டெக்னாலஜிகளும் ஓரளவுக்கு வந்துவிட்ட பின்னர், செதுக்கப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையைக் காட்டிலும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கட்டப்பட்டு தன்னுள் பல சிறப்புகளைக் கொண்டு உயர்ந்து நிற்கும் நம் கோவில் கோபுரங்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை என்பதை உலகம் அறியவேண்டும்! தமிழனின் சிந்தையும் திறமையும் என்றைக்கு வெளிவந்திருக்கிறது? பார்க்கலாம் தமிழனுக்கு விடிவுகாலம் இருக்குமா என்று!