31.3.20

பாதியில் நிறுத்தியது...

அவசர அவசரமாய் அவளுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி,
அருகாமைக் கடை மூடிக் கிடந்ததால் அரைக் கிலோமீட்டர் தாண்டி,
ஆகாயமென பரந்து கிடக்கும் ஆடம்பர நகரத்திலே,
ஆறடுக்கு மாடி கொண்ட சூப்பர்மார்க்கெட் தேடி அலைந்தோம்.

காவேரித்தண்ணீரை தரமறுத்து, போராட வழியறியா ஊர்மக்கள் சில பேரும்
நடுரோட்டில் மறித்தென்னை, வழிமாறி செல்லச்சொல்ல,
மறுபக்கம் திரும்புகையில் வாகனஎண் தநா எனக்கண்டு
நக்கலாய் சொன்னார்கள் திரும்பாதே எரித்திடுவோமென்று.

திசைமாறி சென்றாலும் நெருப்புக்கிரையாகேன் என்றழுத என்வண்டி,
எனையேதும் கேக்காமல் எண்பதைத் தாண்டி எகிறிச் செல்ல,
என்னிதயத் துடிப்பதுவும் நூற்றைத் தாண்டியது.

28.5.18

உழவன்



ஏர்பூட்டி நீரூற்றி, எள்ளளவு பயிராக்கி,
தான்பெற்ற தன்மக்கள், பிணியோடு தடுமாட,
எப்பாடு பட்டேனும், என்மக்கள் பசிபோக்க, 
உடுத்த உடையில்லாமல், உண்ணாம லுறங்காமல், 
வேகாத வெய்யிலிலும், வேர்வைக் குளியலிடும் 

வெள்ளை மன வேந்தனவன்,
இம்மண்ணின் உழவனவன்!

4.4.16

கிழவனின் குறள்வளம்




இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல். 
                                                               -திருவள்ளுவர்.
இந்த வேலையை இந்த காரணத்தினால் இந்த தனி ஒருவன் செய்து முடிப்பானா என்று ஆராய்ந்து அவனை வேலையில் அமர்த்திய பின்பு அந்த வேலையை மொத்தமாக அவனிடமே விடவேண்டும். இது தான் இந்த குறளின் பொருள் ஆகும். 

Planning, Organizing, Staffing, Directing and Controlling - என நாம் 20-ம் நுற்றாண்டின் வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதும் மேலாண்மை தத்துவங்களை பெரிதாகக் கருதும் வேளையில் இந்த இரண்டாயிரத்து நூறு வயதுக் கிழவனாம் வள்ளுவனின் வார்த்தைகளைப் படியுங்கள். கி.மு. 3ம் நுற்றாண்டுக்கும் கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் இடையே வாழ்ந்த இந்த முனிவன் இன்றைய காலத்துக்கும் ஏற்றாற்போல் நிர்வாகத்திறன் (Management skills), வேலைக்கான நேர்காணல் (Employment interview), மதிப்பீடல் (Evaluation), வேலையைப் பகிர்ந்தளித்தல் (Task delegation) என அனைத்து மேலாண்மை செயல்பாடுகளையும் இரண்டே அடியில் ஏழே வார்த்தைகளில் புரிய வைத்துவிட்டான்.

இனி மாஸ்லோ, பிலிப் கோட்லர் புத்தகங்களை வாங்கி பெரிய பெரிய பெட்டிகளில் வைத்து பூட்டி வைப்பதற்கு பதில் கையிலடங்கும் திருக்குறள் புத்தகத்தை வாங்கிக் கொள்ளப் பழகலாம் போல.. 


25.12.14

நம்மக்கள் நம்மக்களே!

      தமிழகத்தின் தென்மாவட்டங்களிலே சற்று வேகமாகவே பரவிவரும் இறை நம்பிக்கை தான் அய்யா வழி நம்பிக்கை! இந்த வழிபாடானது, சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அய்யா வைகுண்டர் என்பவரை பின்தொடர்வதாகும். சற்று விசித்திரமான வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய இந்த நம்பிக்கையை சற்று மேலோட்டமாக ஆராய்ந்து தான் பார்ப்போமே என்று எண்ணினேன்.

    அவ்வாறு ஆராய்கையில்  இந்த  வழிபாட்டு முறையில் பல ஆச்சரியமூட்டும் விசித்திர பழக்க வழக்கங்கள் இருப்பதை அறிந்தேன். அவற்றுள் ஓரிரு விஷயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

      தருமம் என்பதே இந்த வழிபாட்டுமுறையின் முக்கிய கொள்கையாக காணப்படுகிறது. ஊருக்கு ஒரு பதி இருக்க வேண்டும் என்ற கொள்கை முன்னிறுத்தப்படுகிறது. பதி என்றால் 'கோவில்' போல பார்ப்போருக்கு தெரிகின்றபோதும், இத்தகைய பதிகளின் முக்கிய நோக்கம் தாழக்கிடப்போரைக் காப்பதும், பசியில் இருப்போருக்கு தருமம் அளிப்பதுமே ஆகும். இன்றும் ஒவ்வொரு தமிழ்த்திங்களின் முதல் ஞாயிறு அன்று இந்த தர்மப்பதிகளில் அன்னதானம் அளிக்கப்படுகிறது. 

       இறைவனின் அவதாரம் என்று போற்றப்படும் அய்யா வைகுண்டர் அவர்கள் ஒரு பகுத்தறிவு சிந்தனையாளர். தான் வாழ்ந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினரைக் காப்பாற்றும் பொருட்டு பல இன்னல்களை அனுபவித்தவர். அவர் தன் மக்களை சாதி மதம் பாராமல் ஒருமைப்படுத்த போராடியவர். அவரைப் போற்றி அவரது சிந்தனைகளை மிகச் சிறப்பாக இக்கால மக்கள் தொடர்வது பாராட்டத்தக்க விஷயமாகவே இருந்தாலும், சில செயல்களில் மக்கள் பின்தங்குகிறார்கள். 

    தலைமைப்பதியாம் சுவாமித்தோப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. மாப்புக்கேட்டல் என்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன்படி இறைவனிடம் அனைவரும் சேர்ந்து அய்யாவிடம் செய்த தவறுகளுக்காக மாப்பு கேட்பதும், நல்ல குணங்களை தருமாறு இறைவனிடம் கேட்பதுமாக இருக்கும். ஒருவர் சொல்ல மற்றவர் அதை ஐந்து முறை பின்தொடர்வதுமாக இருக்கும். அன்று முதல் ஞாயிறு ஆனதால் கூட்டம் அலைமோதியது. ஒருவர் கூற மற்றோர் அதை பின்தொடர்வதாக இருந்தது. என்ன தான் சொல்கிறார்கள் என்று கவனிக்கலாம் என்று கூர்மையாக காதுகொடுத்தேன். மதியம் 12 மணி ஆனதால் பசி மயக்கத்தில் ஏதோ கடமைக்கு அதனை சொல்லிவிட்டால் இறைவன் நமக்கு அனைத்தையும் நமக்கு தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் சொல்லுவதை உணர்ந்தேன். "அய்யா பொறுமை தரனும்" என்ற வாக்கியத்தை முன்னால் வாசிப்பவர் சொல்லி முடிக்கக்கூட இல்லை. அதற்குமுன் நம்மக்கள் பின்தொடர ஆரம்பிக்கிறார்கள். "அய்யா பொறுமை" இவ்வளவு தான் கேட்கிறது. அதற்கு மேல் நம்மக்களுக்கு பொறுமை இல்லை. இவர்களுக்கு அய்யா வழிபாட்டின் நோக்கத்தையும் அதன் தத்துவத்தையும் எடுத்துக்கூறியே ஆகவேண்டும்.

              உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, மாப்புகேட்டல், என அனைத்தையும் சத்தமாக உச்சரிக்க காரணம் என்ன தெரியுமா? அவ்வாறு உச்சரித்தால் தான் இறைவன் நமக்கு அருள்தருவார் என்றா? இல்லை. அவ்வாறு நாம் கருத்தை நடுநெற்றியில் வைத்து சத்தமாக உச்சரிக்கையில், நம் மனம் முழுவதும் அக்கருத்து நிரம்பியிருக்கும். உதாரணமாக, “அய்யா பொறுமை தரணும்” என்று உச்சரிக்கும்பொழுது, மனம் முழுவதும் அக்கருத்து நிரம்பியிருந்தால், நம் சிந்தனையும் செயலும் அதே கருத்தை நோக்கியே இருக்கும். இதையே அய்யா வழி முன்னிறுத்துகிறது. இதை சற்றும் அறியாமல் கடமைக்கு கத்துவதால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை நம்மக்கள் அறிய வேண்டும்.

    அய்யா வழியில் சிலை வழிபாடு இல்லை! அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? சிந்தித்தது உண்டா? அய்யா வைகுண்டர் மிகச் சிறந்த பகுத்தறிவுக்காரர். மக்களை சிந்திக்க வைக்க முயன்றவர். வாழ்க்கையின் அர்த்தத்தை மக்களுக்கு புரிய வைத்தவர். "கடவுளை வெளியே தேடி அலையாதே. அவன் உன்னுள் தான் இருக்கிறான். நீ செய்யும் செயலில் தான் கடவுளைக் காணமுடியும்" என்ற அற்புதமான கருத்தை முன்னிறுத்தவே ஒரு வித்தியாசமான முறையை கையாண்டார். “சிலையை வணங்காதே! கண்ணாடியை வணங்கு! அதற்குள் இருக்கும் உன்னை வணங்கு. அவ்வாறு வணங்கும்போது, உன்னுள் இருக்கும் நல்ல குணங்கள் வெளிவரும் தீய குணங்கள் தானாகவே அடங்கும்” என்ற பகுத்தறிவுமிக்க கொள்கையை மக்களிடத்தே வலியுறுத்தினார். ஆனால், நம்மக்கள் சும்மா விடுவார்களா? ஒரு விஷயம் கிடைத்தால் அதை நான்காய் பிரித்து ஏழாய் மடித்து அதை பத்தாய் சொல்வதில் கெட்டிக்காரர்களாயிற்றே! ஆம் அவரது கருத்துப்படி கண்ணாடியைத் தான் வணங்குகிறார்கள்! ஆனால் எப்படி தெரியுமா? கண்ணாடிக்கு மாலையிட்டு பொட்டு வைத்து! இப்படி செய்வதற்கு சிலை வழிபாடே செய்துவிடலாமே! ஒன்று மட்டும் உணருங்கள்!

     நீங்கள் அவரது கருத்தைக் கொன்று அதன் சாம்பலைத் திரித்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள்! என் கருத்து மக்கள் மனதைப் புண்படுத்தினால் மன்னிக்கவும். ஆனால் என் கருத்து யாரேனும் ஒருத்தருக்காவது மாற்றத்தை ஏற்படுத்த வழிசெய்யுமானால், அதன் பெருமையும் புகழும் அய்யா வைகுண்டருக்கே போய் சேரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

30.11.14

26.9.14

டீக்கடை ராஜா!

   
கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமாக வடை சாப்பிடும் டீக்கடையில் வண்டியை நிறுத்தினேன். பாட்டியும் தாத்தாவும் வழக்கம்போல பருப்பு வடையையும் உளுந்தவடையையும் சுறுசுறுப்பாக சுட்டுக் கொண்டிருந்தார்கள். டீக்கடை பெஞ்ச்சில் வழக்கம்போல சென்று அமர்ந்தேன், என் நண்பனுடன். தாத்தா தினத்தந்தி பேப்பரைத் தந்தார். உடன் வந்த நண்பன் நம் தமிழ்நாட்டு டீக்கடைப் பாரம்பரியம் தெரியாதவன். படிப்பதற்குத் தான் தினத்தந்தி என்று எண்ணி தலைப்புச் செய்தியை வாசித்தான் – “பிரதமராக மன்மோகன்சிங் மீண்டும் பதவியேற்பு” – அதிர்ந்து போனான். சிரித்துக் கொண்டே உளுந்தவடையில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழில்நுட்பத்தை நண்பனுக்கு சொல்லிக் கொடுத்தேன். இரண்டு பருப்பு வடை, இரண்டு பனியாரம், ஒரு உளுந்த வடை, என ஒரு வடைக் குடும்பத்தையே உள்ளே தள்ளியபடி அமர்ந்திருந்தேன். அருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார். ஒரு 45 வயது இருக்கும். தன் நண்பர் ஒருவரை தன்னோடு அழைத்து வந்திருந்தார். டீ குடித்தபடி இருவரும் கதை பேசிக் கொண்டிருந்தனர். நம் பாரம்பரியமிக்க ஒட்டுக் கேட்கும் தொழிலை தொடங்கினோம் நானும் நண்பனும்.
   வீட்டில் மனைவி செய்யும் அக்கிரமங்களை மிகவும் வருத்தத்துடன், அந்த நபரிடம் அவரது நண்பர் கூறிக்கொண்டிருந்தார். “அம்மாவிடம் எப்போ பார்த்தாலும் சண்டை. காலை எழுந்தது முதல் இரவு வரை எரிந்து எரிந்து விழுகிறாள். சரி இவளை சமாளிக்க சரக்கடித்தால் தான் முடியும் என்று நினைத்து ஒரு முறை சென்றேன். அதையே சாக்கென வைத்து என்னை அடி அடி என அடித்து பதம்பார்த்துவிட்டாள். அவளை சமாளிப்பதே எனக்கு பெரிய வேலையாக இருக்கிறது” என்று புலம்பினான். சிகெரட்டை பற்றவைத்தபடி கதையைக் கேட்டுக்கொண்டிருந்த ஆசாமி முரட்டுத்தனமாக இவன் சொல்வதைக் கேட்டு சிரித்தான். “என்னடா நீ? ஆள் நல்லா ஆலமரம் மாதிரி வளர்ந்திருக்க! இப்படி பொண்டாட்டிக்கிட்ட அடி வாங்கிட்டு வந்து பொலம்பிக்கிட்டு இருக்க? வெக்கமா இல்லையா டா?” என்றார். சரி சும்மாதானே இருக்கிறோம், என்னதான் சொல்ல வருகிறார் எனப் பார்ப்போமே என்று எண்ணியபடி நண்பனும் நானும் சிகரெட் வாயைப் பார்த்தபடி இருந்தோம். மிடுக்குடன், “பொண்டாட்டிய எல்லாம் நமக்கு அடிமை மாதிரி வச்சுக்கனும். ஓவரா ஆட விடக்கூடாது. நாம பேசுனா பொண்டாட்டி எதிர்த்து மூச்சிக்கூட விடக்கூடாது. நாம வீட்டுல இருக்குறப்போ பொண்டாட்டி நம்ம முகத்துக்கு முன்னாடி நிக்குறதுக்கே பயப்படனும்டா.. நீ இதெல்லாம் கல்யாணம் ஆனப் புதுசுலையே தட்டி வச்சிருக்கனும்டா.. இப்போ வந்து பொலம்பிக்கிட்டு இருக்குற, பொம்பளப்புள்ள மாதிரி!” என்ற படி தோரணையாக சிகரெட் துண்டை தரையில் போட்டு செருப்பால் நசுக்கினார். அவரது நண்பன், எனது நண்பன், நான், டீக்கடைத் தாத்தா என அனைவரும் ஆச்சரியம் கலந்த பயத்தோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு பின்னாடி ஒரு பைக் வந்து நின்றது. சிகரெட் ஆசாமியின் நண்பர் மெதுவாக அவரிடம், “ அண்ணே… அண்ணி வந்து நிக்குறாங்க பாருங்க!” என்றார். “இந்த அம்மா பாக்க பாவமா இருக்காங்களே.. ச்ச! இந்த ஆள் போட்டு படாதபாடு படுத்துவான் போல” என்று நண்பன் என் காதில் கிசுகிசுத்தான்.

   கூடுதல் மிடுக்குடன் சிகரெட் ஆசாமி, “என்னடி இங்க வந்து நிக்குற? மார்க்கெட் போனோமா காய்கறி வாங்குனோமா னு இருக்கனும்… போ.. வீட்டுக்கு போய் சோறு பொங்குற வேலைய பாரு!” என்றார். அம்மா அமைதியாக, “என்ன? வாய் வங்கக்கடல் வரப் போவுது? எகத்தாளமா பேசுனா போட்டுத் தள்ளி வீட்டுக்குப் பின்னாடி புதச்சிருவேன் பாத்துக்க!” என்று கையில் இருந்த கூடையை ஆசாமி மீது வீசி, “காய்கறி வாங்கிட்டு வா!” என்றார். எப்படி சமாளிப்பது என்று எண்ணிக்கொண்டே தன் நண்பரின் அருகே அமர்ந்தார், ஆசாமி. நண்பர் புன்முறுவலுடன் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை வாயில் வைத்து புகைத்தார். “அடேங்கப்பா! என்னாமா புகையுது!!!!!” 

28.7.14

உண்மையான போராளிகள்

   ஒவ்வொரு மனிதனின் உடலிலும் நோய் எதிர்ப்புத்தன்மை (Immunity) என்பது பிறப்பிலேயே உருவாகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் (White Blood Cells) தான் இந்த நோய் எதிர்ப்புத் தன்மைக்கு மூலக்காரணம். இவ்வகையான வெள்ளையணுக்கள் நம் எலும்பு மச்சையில் (Bone Marrow) தான் உருவாகின்றன. அவை அப்படியே நம் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் மிகுந்த ஆற்றலுடனே திரியும்.

  நம் உடலில் எதாவது காயம் ஏற்படும்போது அந்த இடத்தின் வழியாக வைரஸ்களும் பாக்டீரியாக்களும் உடலின் உள்ளே நுழைய முனையும். வெள்ளையணுக்கள் இத்தகைய நேரத்தில் மிகத் துரிதமாக செயல்பட்டு அந்த கிருமிகளுடன் போரிட்டு விரட்டுகின்றன. காயம் ஏற்பட்ட இடத்தில் வெள்ளை நிறத்தில் பஸ் (Pus) என்னும் திரவம் வெளி வருவது என்னவென்று தெரியுமா? இவ்வாறாக போரிட்டு மடிந்த வெள்ளையணுக்களும் கிருமிகளும் தான்!
  நுண்ணுயிரிகள் நம் உடலில் நுழைய முனையும்போது அவற்றை அழிக்க வெள்ளையணுக்கள் போராடும். இவ்வாறாக போராடும் அந்த போராளிகளின் இராஜ தந்திரம் தான் காய்ச்சல்! கிருமிகள் நம் உடல் வெப்பத்திலேயே வாழத் தகுதி கொண்டவை. அதனால் அவற்றை மிக எளிதாக விரட்டி அடிக்க நமது நோய் எதிர்ப்பு தன்மையானது நம் உடலின் வெப்பத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் வாழும் தகுதியை இழக்கும் கிருமிகள் செத்துப் போகின்றன. இவ்வாறாக வெள்ளையணுக்கள் மிக எளிதாக அவற்றை விரட்டியடிக்கின்றன. வெள்ளையணுக்களின் இந்த போர்த்தந்திரம் தான் காய்ச்சல் எனப்படுகிறது.
இந்த வெள்ளையணுக்களுக்கு இன்னொரு சிறப்புத் தன்மையும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாவோ வைரஸோ நம் உடலைத் தாக்கும்போது அதன் அடையாளத்தையும் அதனை அழிக்க பயன்படும் நோயெதிர் பொருளின் அடையாளத்தையும் தனக்குள் சேமித்துக்கொள்ளும் இந்த வெள்ளையணுக்கள் அதன் பின்னர் மறுமுறை அதே கிருமி வரும்போது அதே நோயெதிர்பொருளை (Antibody) வெளியிட்டு அந்த கிருமிகளை அழிக்கின்றன.

   இனிமேல் காய்ச்சல் வந்தால் யாரும் கவலைப் படாதீர்கள். காய்ச்சல் அடித்தால் உங்கள்நோயெதிர்ப்பு திறன் நலன்றாக வேலை செய்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.