26.9.14

டீக்கடை ராஜா!

   
கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமாக வடை சாப்பிடும் டீக்கடையில் வண்டியை நிறுத்தினேன். பாட்டியும் தாத்தாவும் வழக்கம்போல பருப்பு வடையையும் உளுந்தவடையையும் சுறுசுறுப்பாக சுட்டுக் கொண்டிருந்தார்கள். டீக்கடை பெஞ்ச்சில் வழக்கம்போல சென்று அமர்ந்தேன், என் நண்பனுடன். தாத்தா தினத்தந்தி பேப்பரைத் தந்தார். உடன் வந்த நண்பன் நம் தமிழ்நாட்டு டீக்கடைப் பாரம்பரியம் தெரியாதவன். படிப்பதற்குத் தான் தினத்தந்தி என்று எண்ணி தலைப்புச் செய்தியை வாசித்தான் – “பிரதமராக மன்மோகன்சிங் மீண்டும் பதவியேற்பு” – அதிர்ந்து போனான். சிரித்துக் கொண்டே உளுந்தவடையில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழில்நுட்பத்தை நண்பனுக்கு சொல்லிக் கொடுத்தேன். இரண்டு பருப்பு வடை, இரண்டு பனியாரம், ஒரு உளுந்த வடை, என ஒரு வடைக் குடும்பத்தையே உள்ளே தள்ளியபடி அமர்ந்திருந்தேன். அருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார். ஒரு 45 வயது இருக்கும். தன் நண்பர் ஒருவரை தன்னோடு அழைத்து வந்திருந்தார். டீ குடித்தபடி இருவரும் கதை பேசிக் கொண்டிருந்தனர். நம் பாரம்பரியமிக்க ஒட்டுக் கேட்கும் தொழிலை தொடங்கினோம் நானும் நண்பனும்.
   வீட்டில் மனைவி செய்யும் அக்கிரமங்களை மிகவும் வருத்தத்துடன், அந்த நபரிடம் அவரது நண்பர் கூறிக்கொண்டிருந்தார். “அம்மாவிடம் எப்போ பார்த்தாலும் சண்டை. காலை எழுந்தது முதல் இரவு வரை எரிந்து எரிந்து விழுகிறாள். சரி இவளை சமாளிக்க சரக்கடித்தால் தான் முடியும் என்று நினைத்து ஒரு முறை சென்றேன். அதையே சாக்கென வைத்து என்னை அடி அடி என அடித்து பதம்பார்த்துவிட்டாள். அவளை சமாளிப்பதே எனக்கு பெரிய வேலையாக இருக்கிறது” என்று புலம்பினான். சிகெரட்டை பற்றவைத்தபடி கதையைக் கேட்டுக்கொண்டிருந்த ஆசாமி முரட்டுத்தனமாக இவன் சொல்வதைக் கேட்டு சிரித்தான். “என்னடா நீ? ஆள் நல்லா ஆலமரம் மாதிரி வளர்ந்திருக்க! இப்படி பொண்டாட்டிக்கிட்ட அடி வாங்கிட்டு வந்து பொலம்பிக்கிட்டு இருக்க? வெக்கமா இல்லையா டா?” என்றார். சரி சும்மாதானே இருக்கிறோம், என்னதான் சொல்ல வருகிறார் எனப் பார்ப்போமே என்று எண்ணியபடி நண்பனும் நானும் சிகரெட் வாயைப் பார்த்தபடி இருந்தோம். மிடுக்குடன், “பொண்டாட்டிய எல்லாம் நமக்கு அடிமை மாதிரி வச்சுக்கனும். ஓவரா ஆட விடக்கூடாது. நாம பேசுனா பொண்டாட்டி எதிர்த்து மூச்சிக்கூட விடக்கூடாது. நாம வீட்டுல இருக்குறப்போ பொண்டாட்டி நம்ம முகத்துக்கு முன்னாடி நிக்குறதுக்கே பயப்படனும்டா.. நீ இதெல்லாம் கல்யாணம் ஆனப் புதுசுலையே தட்டி வச்சிருக்கனும்டா.. இப்போ வந்து பொலம்பிக்கிட்டு இருக்குற, பொம்பளப்புள்ள மாதிரி!” என்ற படி தோரணையாக சிகரெட் துண்டை தரையில் போட்டு செருப்பால் நசுக்கினார். அவரது நண்பன், எனது நண்பன், நான், டீக்கடைத் தாத்தா என அனைவரும் ஆச்சரியம் கலந்த பயத்தோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு பின்னாடி ஒரு பைக் வந்து நின்றது. சிகரெட் ஆசாமியின் நண்பர் மெதுவாக அவரிடம், “ அண்ணே… அண்ணி வந்து நிக்குறாங்க பாருங்க!” என்றார். “இந்த அம்மா பாக்க பாவமா இருக்காங்களே.. ச்ச! இந்த ஆள் போட்டு படாதபாடு படுத்துவான் போல” என்று நண்பன் என் காதில் கிசுகிசுத்தான்.

   கூடுதல் மிடுக்குடன் சிகரெட் ஆசாமி, “என்னடி இங்க வந்து நிக்குற? மார்க்கெட் போனோமா காய்கறி வாங்குனோமா னு இருக்கனும்… போ.. வீட்டுக்கு போய் சோறு பொங்குற வேலைய பாரு!” என்றார். அம்மா அமைதியாக, “என்ன? வாய் வங்கக்கடல் வரப் போவுது? எகத்தாளமா பேசுனா போட்டுத் தள்ளி வீட்டுக்குப் பின்னாடி புதச்சிருவேன் பாத்துக்க!” என்று கையில் இருந்த கூடையை ஆசாமி மீது வீசி, “காய்கறி வாங்கிட்டு வா!” என்றார். எப்படி சமாளிப்பது என்று எண்ணிக்கொண்டே தன் நண்பரின் அருகே அமர்ந்தார், ஆசாமி. நண்பர் புன்முறுவலுடன் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை வாயில் வைத்து புகைத்தார். “அடேங்கப்பா! என்னாமா புகையுது!!!!!”