21.6.14

சில்லறை - தர்மமும் தன்மானமும்!

       உலகில் ஒவ்வொரு மனிதனும் விட்டுக்கொடுக்க துணியாத ஒரே விஷயம் தன்மானம். தன் உயிரை உடலை விட்டு நீங்க விடாமல் தடுக்க வேறு வழியே இல்லை - யாசிப்பதை விட்டால் - என்ற கொடுநிலை ஏற்படும்போது தான் அவன் அதுவரை தன் வாழ்நாளில் காப்பாற்றி வந்த அவனது அடையாளத்தையும் தன்மானத்தையும் இழக்கத் துணிகிறான். தான் பிச்சை எடுப்பது தன் குழந்தைகளை எப்படி பாதிக்கும், தன் மனைவி மற்றும் குடும்பத்தினரை எப்படி அவமானப்படுத்தும் என்பதெல்லாம் தெரிந்தும்கூட அவன் யாசிக்கிறான் என்றால் அவனது உண்மையான நிலை என்னவாக இருக்கும்? வயதான காலத்தில் பிச்சை எடுத்தால் தான் அந்த இருகரங்களுக்குள் அடங்கும் வயிற்றுக்கு சோறு போட முடியும் என்ற கடைசி கட்ட நம்பிக்கைக்கு வந்த பெரியவர்களின் சோகம் எவ்வளவு மோசமாக இருக்கும்? - என்றல்லாம் பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தவாறு எண்ணிக் கொண்டிருந்தேன். வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் ஓடும் மத்தியரேகை தான் இந்த "யாசிப்புநிலை" என எனது ஆராய்ச்சி நிலைக்கு முடிவுரை செய்தேன்.


          பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. கண்கள் பிதுங்கிட, நெஞ்சிலும்பு தோலுக்கு வெளியே புடைத்திட, பலநாள் பட்டினி கிடந்த தோற்றத்தில் இருந்த ஊமைப் பெரியவர் அருகே வந்து தன் வயிற்றைத் தட்டி தர்மம் கேட்டார். எனது ஆழ்ந்த ஆராய்ச்சி முடிவுகள் பெரியவருக்கு சாதகமாக இருந்ததால், எனது வலதுகை எனை ஏதும் கேளாமலே சட்டைப் பாக்கெட்டில் இருந்த 20 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டியது.

          பெரியவர் கண்களில் ஆனந்த நீர்பெருக்கு!  கண்டதும் என் மனதுக்குள் பெருமை கலந்த மகிழ்ச்சி! 

              பேருந்து கிளம்பிடவே, கரம்கூப்பி கும்பிட்டவரை கண்கள் தொடர்ந்தன. வயிற்றில் கட்டி வைத்திருந்த சில்லறைகளை பொறுக்கியவாறு பசியில் ஓடினார்... உணவகத்தையும் தாண்டி... அடடா ஊமை என்று நினைத்தால் கண்பார்வையும் குறைவு தான் போல என்று நினைத்தபடி திரும்பினேன். திரும்பிய திசையிலிருந்து கணீர் குரல் - "தம்பி. இந்தா 60... ஒரு குவாட்டர் குடு!"

2 comments:

  1. இதை போன்ற சம்பவங்கள்தான் மனிதனின் மனதில் இருந்து கருணை என்னும் உணர்வை கொன்றுவிடுகிறதோ. தானம் செய்தும் மனதில் மிஞ்சுவது ஏமாற்றபட்டோம் என்னும் அவமானம் மட்டுமே !!!

    ReplyDelete
  2. நம்பிக்கைகள் இப்படித் தான் வீணடிக்கப்படுகின்றன... விடியும் வரை காத்திருப்போம்!

    ReplyDelete